நூதன முறையில் ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளை 3 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு


நூதன முறையில் ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளை 3 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 13 Feb 2018 10:38 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே நூதன முறையில் ரூ.2லட்சம் நகைகளை கொள்ளை அடித்து சென்ற 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தக்கலை,

திங்கள்சந்தை நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் அஜின்டேவிட்(வயது 28). இவர் தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பு பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று மாலை அஜின் டேவிட் கடையில் தனது தாயாரை வைத்து விட்டு வெளியே சென்றார்.


அப்போது, 3 பெண்கள் நகை வாங்க கடைக்கு வந்தனர். அவர்கள் கடையில் உள்ள பல்வேறு நகைகளை பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த 3 பெண்களும் பின்னர் வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றனர்.

 அதைதொடர்ந்து தாயார் நகையை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, 95 கிராம் எடை கொண்ட நகைகள் காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து மகன் அஜின் டேவிட்டுக்கு தகவல் தெரிவித்தார். கடைக்கு விரைந்து வந்த அவர், கடையில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, அதில் நகை வாங்குவது போல் நடித்து அந்த 3 பெண்கள் அஜின் டேவிட்டின் தயாரின் கவனத்தை திசைதிருப்பியுள்ளனர். அப்போது, அவர்கள் 95 கிராம் எடையுள்ள நகைகளை எடுத்து பைக்குள் மறைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


இதையடுத்து அஜின் டேவிட் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளுடன் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

பின்னர், கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு நூதன முறையில் 95 கிராம் நகையை கொள்ளையடித்த சென்ற 3 பெண்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நகை வாங்குவதுபோல் நடித்து 3 பெண்கள் நூதன முறையில் நகை கொள்ளை அடித்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story