முதியவர் கொலை வழக்கில் விசைத்தறி தொழிலாளிகள் 2 பேருக்கு ஆயுள்தண்டனை


முதியவர் கொலை வழக்கில் விசைத்தறி தொழிலாளிகள் 2 பேருக்கு ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 14 Feb 2018 4:30 AM IST (Updated: 14 Feb 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

முதியவர் கொலை வழக்கில் விசைத்தறி தொழிலாளிகள் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே.சுந்தரம் நகரை சேர்ந்தவர் நேரு (வயது 60). சாயப்பட்டறை தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி இரவு ஆனங்கூர் பிரிவு சாலையில் உள்ள மூங்கில் கடை ஒன்றின் முன்பு அமர்ந்து குடிபோதையில் திட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக நாடகம் பார்ப்பதற்காக வெப்படை உப்புபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் தனபால் (31), குமாரபாளையம் சுந்தரம் காலனி பரமகவுண்டர் நகரை சேர்ந்த சோமசுந்தரம் (31) ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்கள் 2 பேரும் ஆனங்கூர் பிரிவு சாலையில் உள்ள மூங்கில் கடை அருகில் வந்தபோது, நேரு தங்களைத்தான் திட்டுவதாக கூறி ஆத்திரமடைந்து, கீழே கிடந்த செங்கல்லை எடுத்து அவரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த நேரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து நேருவின் மகன் ராஜேந்திரன் (34) குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபால், சோமசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ குற்றம் சாட்டப்பட்ட தனபால், சோமசுந்தரம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அதைத்தொடர்ந்து ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

Next Story