காதலர் தினத்தையொட்டி ஊட்டியில் ரோஜா பூக்கள் விலை உயர்வு


காதலர் தினத்தையொட்டி ஊட்டியில் ரோஜா பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 14 Feb 2018 3:00 AM IST (Updated: 14 Feb 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டி, ஊட்டியில் ரோஜா பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.

ஊட்டி

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் மலர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசு பொருட்களை தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு காதலர் தினத்தன்று காதலர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். மேலும் புதிதாக திருமணமான தம்பதிகளும் காதலர் தினத்தன்று ஊட்டிக்கு வந்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.

காதலர் தினமான இன்று (புதன்கிழமை) ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காதலர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் ரோஜா பூக்களை கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள். வாட்ஸ் அப், முகநூல் என்று வந்தாலும் வாழ்த்து அட்டைகளை கொடுத்துக் கொள்வது இன்றும் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஊட்டியில் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது கடைகளில் ரோஜா பூக்கள் மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களிலும், கார்னேசன் மலர்கள் ஆரஞ்சு, வெள்ளை, நிறங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கிளட்ஸ், லில்லியம், புளுடைசி, ஜெர்புரா, ஆர்கிட் மலர்களும் இடம் பெற்று உள்ளன.

கடந்த ஆண்டு ரோஜாப்பூ ஒன்று ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.5 அதிகரித்து ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு, ஒசூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஊட்டிக்கு ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கார்னேசன் மலர் ஒன்று ரூ.15, கிளட்ஸ் ரூ.25, லில்லியம் ரூ.45, கிரைசாந்திமம், ப்ளு டைசி ரூ.15, ஆர்கிட் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூக்களை வாங்க காதலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைகளில் மலர் கொத்துகள் தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக காய்கறி பயிர்களுக்கு மாற்று பயிராக தேயிலை சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடைந்ததால் அதற்கு மாற்று பயிராக கொய் மலர் சாகுபடி செய்ய சிறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதையடுத்து ரோஜா, கார்னேசன், லில்லியம் போன்ற மலர் வகைகளை சிறு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். காதலர் தினம் உள்ளிட்ட நாட்களில் கொய்மலர்கள் விற்பனை அதிகமாக இருக்கும். இதனால் குன்னூர் பகுதியில் கார்னேசன், லில்லியம் மலர்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. கார்னேசன் மலர் ரூ.11-க்கும், லில்லியம் மலர் ரூ.40-க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக கொய்மலர் விவசாயிகள் கூறினர்.

Next Story