ரவுடி சேட்டு கொலையில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


ரவுடி சேட்டு கொலையில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் ரவுடி சேட்டு கொலையில் சரணடைந்த 3 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்,

ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 36). பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட பல வழக்குகள் உள்ளன. இவர் ஓசூர் ராம் நகரில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி வீட்டில் இருந்த சேட்டு கடத்தப்பட்டு, மறுநாள் 14-ந் தேதி ஓசூர் அருகே நல்லகானகொத்தப்பள்ளியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக பிரபல ரவுடி கொற கோபி கடந்த மாதம் 25-ந் தேதி தர்மபுரி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது கூட்டாளி தொப்பி ராஜாவை போலீசார் கைது செய்தனர். ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (33), நரேஷ் (34), பிரவீன் (31) ஆகிய 3 பேர் கடந்த 3-ந்தேதி கிருஷ்ணகிரி ஜே.எம்.2 கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சேலம் ஜே.எம்.5 கோர்ட்டில் கடந்த 6-ந் தேதி ஓசூர் பெரியார் நகரைச் சேர்ந்த மணி (30), ராம் நகரைச் சேர்ந்த நவீன் (23), கார்த்தி (29), சாந்தி நகரைச் சேர்ந்த சிவக்குமார் (23) ஆகியோர் சரண் அடைந்தனர். போலீஸ் தேடி வந்த ஓசூர் செம்பர தெருவை சேர்ந்த ராஜா (28) என்பவர் சேலம் ஜே.எம்.5 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கணேசன் முன்னிலையில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

இதற்கிடையே இந்த வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்த ராஜேஷ், நரேஷ், பிரவீன் ஆகிய 3 பேரையும் போலீசார் ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் காவலில் எடுக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 3 பேரையும் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு சாந்தி அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து ராஜேஷ், நரேஷ், பிரவீன் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story