சாக்கடை கால்வாயில் செத்து கிடந்த புள்ளிமான் வனத்துறையினர் விசாரணை


சாக்கடை கால்வாயில் செத்து கிடந்த புள்ளிமான் வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 14 Feb 2018 4:15 AM IST (Updated: 14 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே சாக்கடை கால்வாயில் புள்ளிமான் செத்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

தலைவாசல்,

தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சிக்கு வடக்கில் சடையகவுண்டன் வனப்பகுதி உள்ளது. இங்கு மான், கரடி, முயல், முள்ளம் பன்றி, காட்டு பன்றி, காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டதால் தண்ணீர் குடிக்க இந்த வனப்பகுதியில் உள்ள புள்ளிமான்கள் அடிக்கடி சிறுவாச்சூர் கிராமப்பகுதிக்கு இறங்கி வரத்தொடங்கி உள்ளன. நேற்று காலையில் அவ்வாறு இறங்கி வந்த புள்ளிமான் ஒன்றை, ஊருக்குள் இருந்த நாய்கள் துரத்தியது. நாய்களிடம் இருந்து தப்பிச்செல்ல ஓடிய அந்த புள்ளிமான், சிறுவாச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் பின்புறம் சாக்கடை கால்வாயில் தவறிவிழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் சாக்கடையில் மான் இறந்து கிடக்கும் தகவல் அறிந்த ஆத்தூர் வனவர் பாஸ்கர், வனக்காப்பாளர் கோபாலகிருஷ்ணன் அங்கு விரைந்து வந்து அந்த மானின் உடலை மீட்டு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்த மானின் உடலை கால்நடை டாக்டர் பிரசாத் பரிசோதனை செய்தார்.

பின்னர் அந்த மானின் உடல் புதைக்கப்பட்டது. அந்த மான் நாய்கள் துரத்தியதில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்ததா? அல்லது நாய்கள் கடித்ததில் இறந்ததா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story