ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்


ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:00 AM IST (Updated: 15 Feb 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

ராமேசுவரம்,

நாகப்பட்டினத்தில் கடந்த 9-ந்தேதி நடந்த மீனவர் சங்க கூட்டத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். அதில் தீர்மானிக்கப்பட்டபடி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் 179 படகுகளையும் விடுவிக்க வேண்டும். டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (வெள்ளிக் கிழமை) மீனவர்கள் ராமேசுவரம் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு போராட்ட நடத்துவது என்று ராமேசுவரத்தில் நடந்த விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கடல் எல்லையை தாண்டி வரும் தமிழக மீனவர்களுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.17½ கோடி வரை அபராதம் விதிக்கவும், மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது. இதை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறை பிடிக்கப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என்று முடிவு செய்து வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர்.

இதனால் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஏராளமான விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. பேபி தலைமையில் தாசில்தார் கணபதிகாந்தம், மீன்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் முன்னிலையில் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் ராமேசுவரத்தில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரம் உள்பட 5 மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுடன் ராமநாதபுரத்தில் மீன்துறை உதவிஇயக்குனர் மூலம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

Next Story