பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:30 AM IST (Updated: 16 Feb 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 235 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் மற்றும் சமையலர், உதவியாளர், அமைப்பாளர் ஆகியோருக்கு தகுதியின் பேரில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15-ந்தேதி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் திரளானோர் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் திரண்டனர்.

பின்னர் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மாநில செயற்குழு உறுப்பினர் கொளஞ்சி, மாவட்ட செயலாளர் சவிதா உள்பட சத்துணவு ஊழியர்கள் 205 பேரை கைது செய்து வேனில் ஏற்றி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதானவர்களில் 194 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகே அரியலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் சத்துணவு ஊழியர்கள் ஒன்று கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அனை வரும் ஊர்வலமாக அரியலூர் பஸ்நிலையம் அருகே வந்தனர். அங்கு தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 2 மாவட்டங்களிலும் மொத்தம் 235 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர். 

Next Story