மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ரெயில் மறியல் செய்ய முயற்சி 100 பேர் கைது


மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ரெயில் மறியல் செய்ய முயற்சி 100 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2018 4:30 AM IST (Updated: 16 Feb 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் ரெயில் மறியல் செய்ய முயற்சி செய்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பழனி-ஈரோடு ரெயில் பாதை திட்டம், காரைக்குடி- தூத்துக்குடி ரெயில் பாதை திட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை ரெயில் பாதை திட்டம், தஞ்சை-புதுக்கோட்டை ரெயில் பாதை திட்டம் குறித்தும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்காததை கண்டித்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கு கட்சி தலைவர் சரீப் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர், துணைத் தலைவர் வெற்றிச்செல்வன், பொருளாளர் நஜ்முதீன், அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான், இளைஞரணி செயலாளர் சபிஅகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தஞ்சை ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்கள் யாரும் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளும் ரெயில் நிலைய நுழைவு வாயிலை சுற்றிலும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தடுப்புகள் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் வந்தபோது அவர்களை போலீசார் வழிமறித்து கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 64 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் கூறும்போது, கடந்த 4 ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 13 ரெயில்வே திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களின் முதல்-மந்திரிகள் தங்களது மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து போராடுகின்றனர். ஆனால் தமிழகஅரசு தூங்கி கொண்டு இருக்கிறது. தமிழகஅரசை தட்டி எழுப்பவும், தமிழகத்தை புறக்கணிக்கும் மத்தியஅரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடை பெற்றது என்றார்.


Next Story