பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 188 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 188 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரை.அரங்கசாமி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மலர்விழி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அன்பு கோரிக்கையை விளக்கி பேசினார்.
சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டபூர்வமான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் பணி கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
8–வது ஊதிய குழுவில் பிடித்தம் செய்த 21 மாத கால நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 10, 20, 30, 32 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க ஊதியத்தை நிலுவையுடம் வழங்க வேண்டும். சமையல் மற்றும் சமையல் உதவியாளர்களை முதல்–அமைச்சரின் இலவச காப்பீடு திட்டத்தில் இணைத்து காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 188 பேரை போலீசார் கைது செய்தனர்.