கட்சியை காப்பாற்ற இணைய சொன்னார்: மோடி கூறியதால் அமைச்சராக இருக்கிறேன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


கட்சியை காப்பாற்ற இணைய சொன்னார்:  மோடி கூறியதால் அமைச்சராக இருக்கிறேன்  ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2018 3:00 AM IST (Updated: 17 Feb 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

கட்சியை காப்பாற்ற இரு அணிகளும் இணைய வேண்டும் என்று மோடி கூறியதாகவும், அவர் கூறியதால் அமைச்சராக இருக்கிறேன் என்றும் தேனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தேனி

ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவது தொடர்பாக தேனி மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. சையதுகான் தலைமை தாங்கினார். தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் மாவட்ட செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இதில், தமிழக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையும் மாவட்டம் முழுவதும் அ.திமு.க.வினர் ஏழை, ஏளிய மக்களுக்கு தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும். புதிதாக ஒருவர் (டி.டி.வி.தினகரன்) கட்சி தொடங்குவதற்காக டெல்லியில் மனு கொடுத்துள்ளார். அதில், 3 பெயர்களை குறிப்பிட்டு ஏதாவது ஒன்றை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கத்தை, அவர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா வழி நடத்தி சென்றார். எம்.ஜி.ஆர். மறைவின் போது 17 லட்சம் தொண்டர்கள் இருந்த இந்த இயக்கத்தை 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக ஜெயலலிதா கட்டிக் காத்தார். நானும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இந்த கட்சியையும், ஆட்சியையும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அமெரிக்காவில் சிகிச்சை

ஜெயலலிதா சிறைக்கு செல்லும் முன்பு பெங்களூரு நீதிமன்ற வளாகத்தில் என்னை அழைத்து நீங்கள் தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று கூறினார்.

அந்த கால கட்டத்தில் சசிகலா குடும்பத்தினர் எனக்கு கொடுத்த நெருக்கடிகள் ஏராளம். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தனது வீட்டு வாசலை தினகரன் மிதிக்கக் கூடாது என்று கூறினார்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க தினகரனும், தங்கதமிழ்செல்வனும் வேலை பார்த்தார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ‘பன்னீர் தோற்பான். கட்டிய வேட்டியோடு செல்வான்’ என்று சிறையின் உள்ளே இருக்கும் அந்த அம்மா (சசிகலா) சொன்னார்.

இரு அணி இணைப்புக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தேன். அப்போது அவர், கட்சியை காப்பாற்ற இணைய வேண்டும் என்று கூறினார். நான், எனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும், கட்சியை காப்பாற்றினால் போதும் என்றும் கூறினேன். ஆனால், மோடி ‘நீங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்’ என்று கூறினார். அதனால் தான் நான் அமைச்சராக இருக்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Next Story