பழனி அருகே பரபரப்பு: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


பழனி அருகே பரபரப்பு: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2018 3:00 AM IST (Updated: 17 Feb 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். சிறிது தூரத்துக்க தர, தரவென இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி

பழனி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. அவருடைய மனைவி கவிதா (வயது 38). இவர், வெள்ளிக்கிழமை தோறும் கீரனூரில் உள்ள அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக செல்வது வழக்கம். அதன்படி நேற்று தனது ஸ்கூட்டரில் கீரனூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக, ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 2 பேரும், ஸ்கூட்டரை பின்தொடர்ந்து வருவது போல இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, ஸ்கூட்டரின் வேகத்தை அதிகப்படுத்தினார். அவர்களும் விடாமல் மோட்டார் சைக்கிளிலேயே ஸ்கூட்டரை பின்தொடர்ந்தனர்.

வாகரை-தொப்பம்பட்டி சாலையில் தேவதாகுடிவலசு பிரிவு அருகே கவிதா சென்று கொண்டிருந்தார். அப்போது, கவிதா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறிக்க முயன்றனர். இதில் நிலைகுலைந்த கவிதா ஸ்கூட்டருடன் சாலையில் விழுந்தார். கவிதா அணிந்திருந்த சங்கிலி அறுபடவில்லை. இருப்பினும் கவிதாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை இழுத்துக்கொண்டே மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை இயக்கினர். இதனால் சாலையில் சிறிதூரம் கவிதா தர, தரவென இழுத்து செல்லப்பட்டார். நகை அறுந்ததும், மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளிலேயே தப்பி சென்று விட்டனர்.

இதற்கிடையே கவிதாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். காயத்துடன் சாலையில் கிடந்த கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சாலையில் தர, தரவென இழுத்து சென்றபடி பெண்ணிடம் கொடூரமான முறையில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story