16 மாணவ-மாணவிகளுக்கு ரூ.96 லட்சம் கல்விக்கடன்


16 மாணவ-மாணவிகளுக்கு ரூ.96 லட்சம் கல்விக்கடன்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:15 AM IST (Updated: 17 Feb 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் 16 மாணவ-மாணவிகளுக்கு ரூ.96 லட்சம் கல்விக்கடனை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 12,810 மாணவ-மாணவிகளுக்கு ரூ.330 கோடியே 42 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டில் 950 மாணவ-மாணவிகளுக்கு ரூ.47 கோடியே 74 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் வழங்கும் இந்த முகாமில் கலந்துகொண்டு பதிவு செய்துள்ள மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து மிக குறுகிய காலத்தில் கல்விக்கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விக்கடன் பெறுவதற்கான நேர்முக கலந்தாய்வில் பங்கேற்கும் உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதலாம் ஆண்டில் கல்விக்கடன் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் வரை எந்தவித தனிநபர் உத்தரவாதமின்றியும், ரூ.7லட்சத்து 50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் தனிநபர் உத்தரவாதம் மற்றும் சொத்து ஜாமீனுடனும் கடன் வழங்கப்படுகிறது.

இந்த முகாமில் பல்வேறு வங்கிகளின் சார்பில் 16 மாணவ-மாணவிகளுக்கு ரூ.96 லட்சம் கல்விக்கடனை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயகுமார், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கோவிந்தசாமி, சிவபிரகாசம் மற்றும் வங்கி மேலாளர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Next Story