கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் 11 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் 11 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:45 AM IST (Updated: 18 Feb 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டி பிணத்தை வீட்டின் கழிவறை தொட்டியில் வீசிய பெண் 11 ஆண்டுகளுக்கு பின் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்களும் தெரியவந்துள்ளன.

தக்கலை,

குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுதா (37). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர், அதன் பின்பு திடீரென மாயமானார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுதாவிடம் கேட்டனர். அப்போது, ராஜசேகர் வெளிநாட்டு வேலைக்கு மீண்டும் சென்று விட்டதாக சுதா கூறி வந்துள்ளார். ஆனால், ராஜசேகர் அதன் பின்பு ஊருக்கு திரும்பி வரவில்லை.

இதனால் சுதா மீது அவருடைய அண்ணன் ரவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராஜசேகர் மாயமானது தொடர்பாக அவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், ராஜசேகர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், சுதா தான் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, மகனுடன் வாகவிளை பகுதியில் வீடு பார்த்து வசித்து வந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வின் ராபர்ட் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ரவி அங்கு சென்று ராஜசேகர் பற்றிய தகவல்களை கூறுமாறு சுதாவிடம் அடிக்கடி கேட்டுள்ளார். எனவே அவர் தனக்கு தொல்லை கொடுப்பதாக செல்வின் ராபர்ட்டிடம் சுதா கூறி இருக்கிறார்.

எனவே செல்வின் ராபர்ட் சிலருடன் சேர்ந்து ரவியை வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த ரவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து தங்கை சுதா மீது ரவிக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. எனவே ராஜசேகர் மர்மமான முறையில் மாயமாகி இருப்பதாக கூறி அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜசேகர் கொலை செய்யப்பட்ட பயங்கரம் தற்போது அம்பலமாகி உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ராஜசேகர் பேராணிவிளை பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்த போது, அவரது மனைவி சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆன்றின் ஷிபு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம் ராஜசேகருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் சுதாவும், ஆன்றனி ஷிபுவும் ஒன்றாக இருந்ததை ராஜசேகர் பார்த்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சுதாவும், கள்ளக்காதலன் ஆன்றனி ஷிபுவும் சேர்ந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு, பிணத்தை வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவறை தொட்டியில் வீசி மூடிவிட்டதாக தெரியவருகிறது.

அதன் பின்னர் அவர்கள் தொடர்பு நீடித்து வந்துள்ளது. ராஜசேகர் எங்கே? என்று யாராவது கேட்டால் அவர் மீண்டும் வெளிநாடு சென்று விட்டார் என்று கூறி சுதா சமாளித்து வந்துள்ளார். ஆனால், ஆண்டுகள் பல கழிந்த பின்பும் ராஜசேகர் மீண்டும் ஊருக்கு திரும்பி வராதது சுதா மீது அவருடைய குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தான் சுதா தனது வீட்டை வேறு இடத்துக்கு மாற்றி உள்ளார். அங்கு சென்ற பின்பு அவருக்கும், செல்வின் ராபர்ட்டுக்கும் பழக்கம் ஏற்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதா தலைமையில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த வீட்டுக்குச் சென்றனர். கழிவறை தொட்டி திறக்கப்பட்டு, ராஜசேகரின் உடலின் பாகங்களும், எலும்புகளும் சேகரித்து எடுக்கப்பட்டன.

மேலும் அவர் உடுத்தி இருந்த வேட்டி, செருப்புகளும் கிடைத்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சுதாவையும், அவரது கள்ளக்காதலன் ஆன்றனி ஷிபுவையும், சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சுதாவின் அண்ணன் ரவியை அடியாட்கள் மூலம் தாக்கியதாக செல்வின் ராபர்ட்டையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story