காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கம் சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?


காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கம் சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?
x
தினத்தந்தி 17 Feb 2018 10:30 PM GMT (Updated: 17 Feb 2018 7:07 PM GMT)

காமராஜர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கத்தை புனரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட செயற்கை நீர்த்தேக்கம் சின்னாறு நீர்த்தேக்கம். 1958-ம் ஆண்டு காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது சுமார் 750 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு காலத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பயணிகள் இங்கு சற்று இளைப்பாறி செல்லும் இடமாகவும், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்ட மக்களுக்கு சுற்றுலா தலமாகவும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக விடுமுறை காலங்களில் வந்து பொழுதுபோக்கு இடமாகவும் விளங்கியது.

ஆனால் தற்போது வேன் மற்றும் கார் நிறுத்தும் இடமாகவும், சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறி வருகிறது. மேலும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் நீர்த்தேக்கத்தில் பொலிவு சீர்குலைந்து வருகிறது. சின்னாறு நீர்த்தேக்கம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், மழைக்காலங்களில் பச்சைமலையில் இருந்து காட்டாறுகளில் வரும் தண்ணீரை சேமித்து வைத்து பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் ஆட்சியில் இருந்தபோது சின்னாறு நீர்த்தேக்க திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அமைச்சராக இருந்த கக்கன் அடிக்கடி நேரில் வந்து நீர்த்தேக்க பணிகளை கவனித்து வந்தார். இந்த நீர்த்தேக்கத்தை சுற்றி நீரூற்றுகள், விவசாயிகளின் சிலைகள், பொம்மைகள், ஊஞ்சல்கள், சறுக்கு ஏணி என பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் அடங்கிய பூங்காவும் இருந்தது. ஆனால் இன்று பூங்கா என ஒன்று இருந்த இடமே தெரியாமல் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. ஊஞ்சல்கள், பொம்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஊராட்சி நிர்வாகம் தனது பங்குக்கு குப்பை குழிகளை அமைத்து சின்னாறு நீர்த்தேக்கத்தை பாழ்படுத்தி விட்டன என்று கூறினர்.

மேலும் சின்னாறில் இருந்து பெண்ணக்கோணம் வரை செல்லும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் வயல்கள் வறண்டு கிடக்கின்றன. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் சின்னாறு நீர்த்தேக்கம் இல்லாமல் போகும். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சின்னாறு பகுதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு மீண்டும் பூங்காவை அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர். 

Next Story