மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை


மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2018 10:45 PM GMT (Updated: 17 Feb 2018 7:23 PM GMT)

நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி 125-வது ஆண்டு விழாவில் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் 125-வது ஆண்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி உஷா வரவேற்று பேசினார். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கம், அலங்கார நுழைவு வாயில் ஆகியவற்றை திறந்து வைத்தும், பல்வகை போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கையேடு 2-ம் பாகத்தை வெளியிட்டும் பேசினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி. புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையையும், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. புதிய விழா மேடையையும் திறந்து வைத்தனர்.

கடந்த 7 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சாலைகள் புதுப்பிக்கப்பட்டதால் விபத்துக்கள் குறைந்து உள்ளன. பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் புதிய பாலம் திறக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.பி.காலனியில் ரூ.39 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, திறக்கும் தருவாயில் உள்ளது.

இந்த மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தோம். உங்களுக்கு அருகில் சேலத்தில் மருத்துவ கல்லூரி உள்ளது என கூறி கரூருக்கு கொடுத்தார். அடுத்த முறை தருவதாக கூறினார்.

எனவே முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வர உறுதுணையாக இருந்து நடவடிக்கை மேற்கொள்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை குடும்பம் மற்றும் பாரம்பரியத்தில் உள்ளவர்கள் மட்டுமே முதல்-அமைச்சராக வர முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் முதல் முறையாக ஒரு சாமானியன் முதல்-அமைச்சராக வந்து உள்ளார். அவரது ஆட்சி இன்று போகும், நாளை போகும் என கூறி வந்தனர். ஆனால் வெற்றிகரமாக ஓராண்டு நிறைவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 3 ஆண்டுகள் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசைப்படி பல ஆண்டுகள் நீடிக்கும்.

முன்னதாக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா மாணவர்கள் சத்துணவு உண்ணும் அறையை திறந்து வைத்து பேசும்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் பெண்களுக்கு தங்கும் விடுதி கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி மலைவாழ் மக்கள் நிறைந்த தொகுதி என்பதால் அங்கு கூடுதலாக ஒரு தங்கும் விடுதி கட்ட முதல்-அமைச்சரிடம் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார்.

Next Story