மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆய்வுக்கூட்டம்


மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

தேனி,

பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான ஆய்வுக் கூட்டம் தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார்.

மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி கல்வி கற்பிக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு மொத்த நிதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நிதியினை கல்வி சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வியினை தனியார் பங்களிப்புடனும் வழங்கிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.

மாணவ, மாணவிகளுக்கு எழுத்துத்திறன், வாசிப்புத்திறன் தேர்வுகள் அவ்வப்போது நடத்தி அவர்களின் திறனை வெளிப்படுத்திட வேண்டும். கல்வியை தவிர்த்து தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி சம்பந்தப்பட்ட போட்டிகளில் பங்கு பெறச் செய்து அவர்களுக்கு நல்வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். மாணவ, மாணவிகள் எதிர்காலத்திற்கான தங்களது துறைகளை தேர்வு செய்வதில் அவர் களுக்கு உற்ற நம்பிக்கையை பெற்ற ஆசானாகவும் திகழ்ந்திட வேண்டும்.

ஆசிரியர்கள் சீரான இடைவெளியில் பெற்றோர்களை சந்தித்து, மாணவ, மாணவிகளின் கற்றல் தரம் குறித்து எடுத்து கூறி மாணவர்களை மேன்மைப்படுத்திட ஆலோசனைகள் வழங்கி, பெற்றோர்களுக்கான கடமை மற்றும் பொறுப்புகளை உணர்த்திட வேண்டும். தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதியினை எவ்வித காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story