ஊட்டியில் நீராவி என்ஜின்களுக்கு தண்ணீர் நிரப்பும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீர்தேக்க தொட்டி கீழே விழுந்தது


ஊட்டியில் நீராவி என்ஜின்களுக்கு தண்ணீர் நிரப்பும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீர்தேக்க தொட்டி கீழே விழுந்தது
x
தினத்தந்தி 17 Feb 2018 10:04 PM GMT (Updated: 17 Feb 2018 10:04 PM GMT)

ஊட்டியில் நீராவி என்ஜின்களுக்கு தண்ணீர் நிரப்பும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீர்தேக்க தொட்டி கீழே விழுந்தது. அதன் பாரம்பரியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் இயக்கப்பட்டது. கடந்த 1908-ம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்குவது தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் என்ஜின் மூலமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் நீராவி என்ஜின்களுக்கு தண்ணீர் நிரப்புவதற்காக குன்னூர், கேத்தி, ஊட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இரும்பு கம்பிகளால் உயரமான நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த தொட்டிகளில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு நீராவி என்ஜின்களுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. மேலும் மலை ரெயில் பெட்டிகளை கழுவி சுத்தம் செய்யவும் பயன்பட்டது.

இந்த நிலையில் ஊட்டி ரெயில் நிலையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீர்தேக்க தொட்டி ஒன்று விரிவாக்க பணியின்போது கீழே விழுந்தது. நீராவி என்ஜின்களுக்கு தண்ணீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட இந்த நீர்தேக்க தொட்டி இந்த நிலைக்கு ஆகியிருப்பது வேதனை அளிக்கிறது. ரெயில் நிலையத்தை விரிவாக்கும் செய்யும் பொதுப்பணித்துறையினர் பாரம்பரிய நீர்தேக்க தொட்டியை மீண்டும் அந்த இடத்தில் அமைக்க நடவடிக்கை வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாரம்பரிய கட்டிடம் மற்றும் கலை பாதுகாவலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story