ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம்


ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம்
x
தினத்தந்தி 18 Feb 2018 11:15 AM IST (Updated: 18 Feb 2018 11:08 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 19-ந்தேதி (நாளை) டெல்லியில் தொடங்குகிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 19-ந்தேதி (நாளை) டெல்லியில் தொடங்குகிறது. ஏப்ரல் கடைசி வரை தொடரும் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 568 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்த தேர்வுக்கு பின்னர் சுமார் 900 பேர் இறுதிப்பட்டியலில் இடம்பெறுவார்கள். இதில் சுமார் 150 பேர் ஐ.ஏ.எஸ். பணிக்கும், 120 பேர் ஐ.பி.எஸ். பணிக்கும், 30 பேர் ஐ.எப்.எஸ். பணிக்கும் (அயல்நாட்டு பணி) தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் வருவாய்த்துறை, கலால்துறை, ரெயில்வே போன்ற 22 துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு 275 மதிப்பெண்கள். இது முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடுதல் செய்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட விரும்பும் போட்டியாளர்கள் இந்த நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நேர்முகத்தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் போட்டியாளர்கள் மீண்டும் தொடக்க கட்ட தேர்வான முதல் நிலைத்தேர்வு எழுதி பழையபடி தொடங்க வேண்டும். இதற்கு மொத்தம் ஒரு ஆண்டு காலம் தேவைப்படும். ஆக, ஒருவித பதற்றத்தில் போட்டியாளர்கள் இந்த தேர்வை அணுகுவது இயற்கையே.

நேர்முகத் தேர்வு என்பது ஒரு தேர்வுதான். ஆனால், இது வாய்மொழியான தேர்வு என்பதோடு ஒருவரின் ஆளுமையை சோதிக்கும் தேர்வும் கூட.

ஐந்து பேர் அடங்கிய குழு நேர்முகத்தேர்வை நடத்தும். போட்டியாளர்களிடம் கேள்விகளை கேட்டு, அதற்கான பதில்களைப் பெறுவார்கள். பதில் சொல்லப்படும் விதம், அதன் பொருள், கருத்தின் ஆழம், உடல்மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் அரசின் உயர் பதவிகளில் பணியாற்ற தகுதியுள்ளவர்தானா? என்பதை கண்டறிவார்கள்.

போட்டியாளர்களிடம் பொதுவான விஷயங்கள் பற்றிய கேள்விகளை கேட்டு பதில்களை வரவழைப்பார்கள். அதுபோல கல்லூரியில் படித்த பாடங்களில் இருந்தும், முக்கிய தேர்வு எழுதிய விருப்பப்பாடத்தில் இருந்தும், பொழுதுபோக்குகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

ஆனால், இது படித்த பாடத்தில் உள்ள அறிவை சோதிக்கும் ஒரு தேர்வு அல்ல. அது எழுத்து வடிவிலான முதன்மை தேர்வின் போது சோதித்தாகிவிடும். மாறாக, இதை ஆளுமைக்கான தேர்வு எனலாம். இங்கும் மனதளவில் விழிப்புணர்வு, புரிந்துகொள்ளும் திறன், சிந்தனை திறன், முடிவு எடுப்பதில் வல்லமை, படித்த பாடத்தில் ஆழம், மற்றவர்களோடு ஒத்துப்போதல், தலைமைப்பண்புகள், அறிவார்ந்த நேர்மை, அறநெறி நேர்மை ஆகியவை சோதிக்கப்படும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் குணாதிசயங்கள். அவற்றை சோதிக்கும் ஒரு தேர்வுதான் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு.

நீங்கள் ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறீர்கள்? என்பது வழக்கமான ஒரு கேள்வி. இதற்கு பலர் ‘எனது குழந்தை கால கனவு’, ‘எனது பெற்றோரின் கனவு’, ‘சேவை செய்ய விரும்புகிறேன்’ என்றெல்லாம் பதில் கூறுகிறார்கள். இந்த பதில் சிறந்த பதில் என்று கூறமுடியாது. ‘பல வேலைகள் எனக்கு கிடைக்க வாய்ப்புகள் இருந்தாலும், ஐ.ஏ.எஸ். பணி சவாலான பணியாக இருப்பதாலும், மனநிறைவு தரும் பணியாக இருப்பதாலும், அரசு பணியாக இருப்பதாலும், இது எனக்கு பிடித்திருக்கிறது’ என்று பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு பதிலை அளிக்க போட்டியாளர்கள் முன்கூட்டியே தங்களை தயார் செய்திருக்க வேண்டும்.

ஒரு சாதாரணமான கேள்விக்கு கூட பதிலை முன்கூட்டியே தயார் செய்யவில்லை என்றால் சரியான பதிலை அளிக்க முடியாமல் போய்விடும். எடுத்துக்காட்டாக, ‘உங்களை அறிமுகப்படுத்துங்கள்’ என்று கேட்டால், சிலர் பெயரைக்கூட சொல்ல மறந்துவிடுவார்கள். ஏதோ ஒரு கிராமத்தின் பெயரை சொல்லி அது எங்கு இருக்கிறது என்று கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். இந்த கேள்விக்கு, ‘எனது பெயர் மகேஷ். எனது ஊர் சென்னை மாநகரில் உள்ள ஆவடி. நான் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளேன். எனது தந்தை பள்ளி ஆசிரியர். எனக்கு ஒரு தங்கை உண்டு. கல்லூரியில் படிக்கிறார். எனக்கு அரசு வேலை பிடிக்கும்’ என்று பதில் சொல்லிவிட்டால் அருமையாக இருக்கும். அது முன்னரே திட்டமிட்டு தயார் செய்தால்தான் முடியும்.

போட்டியாளர்களின் முழு விவரத்தை அந்த நேர்முக குழுவினர் வைத்திருப்பார்கள். அதில் இருந்தும் கேள்விகள் வரலாம். எனவே ஒவ்வொரு போட்டியாளரும் தன்னைப்பற்றிய சிறிய ஆராய்ச்சி செய்வது நல்லது. தனது பெயர், ஊர், படித்த கல்லூரி, படித்த பாடப்பிரிவு, பொழுதுபோக்கு ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒருவரின் பெயரில் கூட பொருள் இருக்கும். அதையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ராஜேஸ்கண்ணா என்ற மாணவரிடம் இந்தி நடிகர் ராஜேஸ்கண்ணா நடித்த படங்களின் பெயரை கேட்டுள்ளனர். அவரால் சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் அவர் அதற்கான ஆராய்ச்சியை செய்யவில்லை.

ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக பயிற்சி அளித்த அனுபவத்தில் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். ஆங்கில அறிவு சற்று குறைவு என்றாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. நாம் சொல்லும் தகவல் உண்மையாக இருத்தல் வேண்டும். உடல்மொழி சிறப்பாக இருத்தல் வேண்டும். அப்போது நியாயமான மதிப்பெண்கள் பெறலாம். இருப்பினும், இருக்கும் சில நாட்களில் ஆங்கிலத்தை இலக்கண பிழை இல்லாமல் பேச பயிற்சி எடுப்பதில் தவறு இல்லை.

கேள்வியை கவனமாக கேட்டு அதன்பின்னர் பதிலை தர போட்டியாளர்களை கேட்டுக்கொள்வேன். சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட வேண்டும். அது உண்மைக்கு மாறாக இருத்தல் கூடாது. தெரியவில்லை என்றால், தெரியவில்லை அல்லது ஞாபகமில்லை என்று கூறிவிடுவது சிறந்தது. தோராயமாக ஊகித்து பதில் சொல்வது, நல்ல பண்பு அல்ல. முரட்டுத்தனமாக பதில் சொல்வது, தடித்த வார்த்தைகளில் பதில் சொல்வது, தாக்கி பேசுவது, வாக்குவாதம் செய்வது, தகராறு செய்வது, தவறாக சொன்னதை சரி என்று சாதிப்பது போன்றவை நேர்முகத் தேர்வில் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். அவற்றை ஒரு போதும் செய்யக்கூடாது.

நேர்முக தேர்வில் நாம் நாமாகவே இருந்துகொள்வது மிகச்சிறந்த அணுகுமுறை என்று பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. எல்லாம் தெரிந்தவர்கள் போல பாசாங்கு செய்வது நல்லது அல்ல. எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் பதில் சரியாக சொல்ல வேண்டும் என்ற நியதி இல்லை. பாதி கேள்விகளுக்கு பதில் சரியாக இல்லை என்றால் கூட, 150 மதிப்பெண்களை பெற்றுவிடலாம். எல்லாம் தெரிந்தவர்கள் போல நடித்து பொய் பேசினால் அனைத்தும் வீணாகிவிடும்.

நேர்முகத்தேர்வில் பதற்றம் எப்போதும் நம்மை நிழல் போலத் தொடரும். ஆனால் அதையே பீதியாக மாற்றிவிடக்கூடாது. பதற்றமானவர் காலை வேளையில் ‘மாலை வணக்கம் ஐயா’ என்று சொல்ல வாய்ப்புண்டு. பல நாட்கள் பயிற்சி எடுத்து, பல மாதிரி நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பதற்றத்தை கையாள தெரிந்துவிடும். அப்படி முன்கூட்டி பயிற்சி பெற்றவருக்கு, டெல்லியில் நடக்கும் நேர்முகத்தேர்வுகூட அடுத்த ஒரு மாதிரி நேர்முகத்தேர்வு போன்ற உணர்வை தான் தரும். பதற்றம் இருக்காது. பழக்கப்பட்ட ஒரு செயல்போன்று அமையும்.

- முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

Next Story