ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள் உருவம்


ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள் உருவம்
x
தினத்தந்தி 18 Feb 2018 11:00 PM GMT (Updated: 18 Feb 2018 5:28 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், எந்திரத்தில் பணம் வைத்திருந்த பகுதியை உடைக்க முடியாததால் ரூ.6½ லட்சம்  தப்பியது.

இதுபற்றி வங்கி அதிகாரிகள் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அந்த ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அந்த காட்சியில், 2 வாலிபர்கள் நள்ளிரவு 1 மணியளவில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைகிறார்கள். அவர்கள் 2 பேரும் தங்கள் சட்டையை கழற்றி முகத்தை முகமூடி போல் கட்டியுள்ளனர். தங்கள் கையில் உள்ள  இரும்பு கம்பியால் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை அடித்து உடைக்கிறார்கள். பிறகு ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைக்க போராடுகிறார்கள். சுமார் 45 நிமிடங்கள் முயற்சி செய்தும் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விடுகிறார்கள்.

ஏ.டி.எம். மையத்தின் சுவரில் இருந்த கேமிராவை உடைத்த கொள்ளையர்கள் எந்திரத்தில் இருந்த கேமராவை கவனிக்க தவறி விட்டனர். அதில் அவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் விவரங்கள் தெளிவாக பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி அதன் மூலம் 2 மர்ம நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story