நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2018 11:00 PM GMT (Updated: 18 Feb 2018 7:08 PM GMT)

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஏப்ரல் மாதம் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு பெட்ரோலிய துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கியது. இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய கோரி விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் 22 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரைத்துறையினர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி, மாநில அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கி தொடர்ந்து 174 நாட்கள் நடந்தது.

நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு கிராமங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்தது. அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் கணேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் அகற்றப்பட்டு விவசாயிகளிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதிமொழி கடிதம் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் முடிந்த நிலையிலும் திட்டத்தை ரத்து செய்யாமல் தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த உடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளதால் நெடுவாசலை சுற்றியுள்ள விவசாயிகள், கிராம மக்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி வந்தனர். இதில் முதல்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நெடுவாசல் கடைவீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போராட்ட உயர்மட்டக்குழு தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் தலைமை தாங்கினார். ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. சுவாமிநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்கள் புதுக்கோட்டை செங்கோடன், தஞ்சாவூர் திருஞானம் மற்றும் மாணவர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நெடுவாசல் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுத்தது போல அனைத்து ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளையும் அகற்றி, நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது போராட்ட காரணங்களை உயர்மட்டக்குழு தெட்சிணாமூர்த்தி தீர்மானமாக நிறைவேற்றி வாசித்தார். அப்போது, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். அந்த போராட்டம் பற்றி உயர்மட்டக்குழு முடிவு செய்யும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் பேசுகையில், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் இந்த தொகுதிக்குள் அனுமதிக்க மாட்டோம். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும், அதை ஆளுங்கட்சி கண்டுகொள்ளவில்லை. மீண்டும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அடுத்தகட்ட போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் செயல்படும் என்று நினைக்கிறோம், தவறும் பட்சத்தில் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியது இருக்கும், என்றார். 

Next Story