ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம் உருவாக்க வேண்டும்


ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம் உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:15 AM IST (Updated: 19 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம் உருவாக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பின் அனைத்து பிரதிநிதிகளையும் அழைத்து பேசி கூட்டமைப்பின் சார்பில் வைக்கப்பட்டு உள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை இதுவரை பின்பற்றப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்.

1.4.2003 முதல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைவருக்கும் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத காலத்திற்கான ஊதிய உயர்வு நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். மேல்நிலைப்பள்ளியில் உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் இடங்கள் பதவி உயர்வு மூலம் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பதை உறுதியாக கல்வித்துறை பின்பற்ற வேண்டும்.

மாணவர்கள் நலன் கருதியும், ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம் உருவாக்க வேண்டும். சமூக அறிவியல் பாடத்திற்கு 7 பாட வேளைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பொதுத்தேர்வு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உழைப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் இதர படிகள் அனைத்தையும் இரு மடங்காக வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் கூடுதலாக ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையும், அதற்குரிய மருத்துவ சிகிச்சையும் ஆசிரியர்களுக்கு கிடைத்திடும் வகையில் அரசாணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜாக்கண்ணு, சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் செல்வம், பொருளாளர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story