கோமதேஸ்வரர் கோவிலில் 2-வது நாளாக மகா மஸ்தகாபிஷேகம் நடந்தது


கோமதேஸ்வரர் கோவிலில் 2-வது நாளாக மகா மஸ்தகாபிஷேகம் நடந்தது
x
தினத்தந்தி 18 Feb 2018 10:45 PM GMT (Updated: 18 Feb 2018 9:09 PM GMT)

கோமதேஸ்வரர் கோவிலில் 2-வது நாளாக நேற்று மகா மஸ்தகாபிஷேகம் நடந்தது.

சிக்கமகளூரு,

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் உலக பிரசித்தி பெற்ற கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 57 அடி உயர பாகுபலி சிலை உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா மஸ்தகாபிஷேக விழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது.

மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்துகொள்ள ஏராளமான ஜெயின் மது துறவிகள் சரவணபெலகோலாவுக்கு வந்துள்ளனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகா மஸ்தகாபிஷேகம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று 1,008 கலசாபிஷேகம் நடந்தது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் பாகுபலிக்கு பாதபூஜை செய்தனர்.

பாகுபலிக்கு அபிஷேகம்

நேற்று காலை மகா மஸ்தகாபிஷேக பூஜையில் 504 குடங்களில் தண்ணீர், 350 லிட்டர் பால், 300 லிட்டர் கரும்பு சாறு, 350 லிட்டர் இளநீர், 20 கிலோ சந்தன பவுடர், 20 கிலோ அஷ்டகந்தம், 20 கிலோ கசாய பொடி, 20 கிலோ கந்த பொடி, 2 கிலோ காஷ்மீர் கேசரி, 1,000 கிலோ கற்கண்டு, 50 கிலோ அரிசி மாவு மற்றும் மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களில் 57 அடி உயர பகவான் பாகுபாலிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் தீபாராதனையும் நடந்தது. இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் பாகுபாலியை தரிசித்து சென்றனர். 

Next Story