அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் திடீர் தீ விபத்து


அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 19 Feb 2018 10:30 PM GMT (Updated: 19 Feb 2018 6:50 PM GMT)

அதியமான்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உதிரிபாக குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள அதியமான்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தர்மபுரி மண்டல மத்திய பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் தர்மபுரி மண்டலத்திற்கு தேவையான புதிய புறநகர் மற்றும் நகர பஸ்களுக்கு பாடி கட்டுதல் மற்றும் பழுது ஏற்படும் வாகனங்களுக்கு பழுது நீக்குதல் ஆகியவை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பணிமனையில் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில், இந்த பணிமனை வளாகத்தில் உள்ள உதிரிபாக குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, பணிமனை மற்றும் அதன் வளாகப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் பணிமனையில் இருந்து வேகமாக வெளியேறினர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் தர்மபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் வந்து, உதிரிபாக குப்பை கிடங்கில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள், அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது உதிரிபாக கிடங்கு அமைந்துள்ள பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது பணியாளர்கள் யாரேனும் புகை பிடித்த சிகரெட்டை அணைக்காமல், குப்பை கிடங்கு பகுதியில் போட்டதால் தீ பிடித்ததா? என விசாரணை நடத்தினர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் வேஸ்ட்டேஜ் உதிரிபாக குப்பைகள் எரிந்து நாசமாகியிருப்பதாக, பணியாளர்கள் மற்றும், ஒப்பந்த பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பணிமனை மற்றும் அதன் வளாகப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தால் மட்டுமே, இதுபோன்ற விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்து உண்மை நிலை தெரியவரும் என அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த தீ விபத்து குறித்து அறிந்ததும் நிருபர்கள், புகைப்படக்காரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் நிருபர்கள், புகைப்படக்காரர்களுக்கு அனுமதி மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Next Story