மாதவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது


மாதவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2018 4:30 AM IST (Updated: 20 Feb 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை ஆவின் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜோசப்ஜான்(வயது 50). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி, குழந்தைகள் கடந்த வாரம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த ஜோசப்ஜான், கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து, ஜோசப்ஜான் மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மாதவரம் பால்பண்ணை போலீசார் கொசப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் சென்னை வேளச்சேரியை சேர்ந்த காசி (வயது 19) என்பதும், ஜோசப்ஜான் வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர் கடந்த 2014-ம் ஆண்டு வேளச்சேரியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, மாதவரம் பால்பண்ணையை அடுத்த கொசப்பூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததும், அங்கிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தப்பி சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் காசியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் போலீசார் காசி மீது வழக்கு பதிவு செய்து அவரை திருவெற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story