தண்டவாளத்தை எளிதில் கடந்து செல்வதற்கு ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்


தண்டவாளத்தை எளிதில் கடந்து செல்வதற்கு ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Feb 2018 4:00 AM IST (Updated: 20 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாளத்தை எளிதில் கடந்து செல்வதற்கு சோளகம்பட்டியில், ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டரிடம் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சமூக நல சங்கம் சார்பில் தலைவர் அயனாபுரம் நடராஜன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

திருச்சி- தஞ்சை ரெயில்வே வழித்தடம் மிகவும் பழமையானது. 52 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள இந்த தடத்தில் திருச்சி, பொன்மலை, மஞ்சள்திடல், திருவெறும்பூர், தொண்டமான்பட்டி, சோளகம்பட்டி, அயனாபுரம், பூதலூர், ஆலக்குடி, தஞ்சை என 10 ரெயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தண்டவாளத்தின் இருபுறமும் பொதுமக்கள், வாகனங்கள் கடந்து செல்ல சோளகம்பட்டியை தவிர எல்லா ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே கேட் வசதி உள்ளது.

ரெயில்வே கேட்

திருச்சி, தஞ்சை இடையே 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ரூ.450 கோடி மதிப்பீட்டில் இரட்டைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சோளகம்பட்டி ரெயில் நிலையத்தின் மையத்தில் நான்குபுறமும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

கல்லணைக்கால்வாய் பாசன பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகளும், இதர பிரிவு மக்களும் வசிக்கிறார்கள். சுற்றிலும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே கேட் உள்ள நிலையில் சோளகம்பட்டியில் இந்தவசதி இல்லாதது இந்த பகுதி மக்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது. எனவே சோளகம்பட்டியில் ரெயில்வே கேட் அமைத்து பாதை வசதியோ அல்லது சுரங்கப்பாதையோ அமைத்து பொதுமக்கள் நடந்தோ, வாகனங்களிலேயே எளிதில் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story