விடுமுறை அறிவிக்கப்பட்டது தெரியாமல் கல்லூரிக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


விடுமுறை அறிவிக்கப்பட்டது தெரியாமல் கல்லூரிக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 7:48 PM GMT)

தஞ்சை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தியதையடுத்து 1 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தெரியாமல் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் கல்லூரிக்கு வந்த பேராசிரியர்களும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த கல்லூரியின் அருகே விடுதியும் உள்ளது. வெளியூரில் இருந்து வரும் மாணவிகள் இந்த விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரி மற்றும் விடுதியில் அடிப்படை வசதி இல்லை என்று கூறி கடந்த 17-ந் தேதி கல்லூரி வளாகத்தில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரிக்கு கண்காணிப்பு கேமரா வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வந்தனர். அப்போது கல்லூரிக்கு 1 வாரம் விடுமுறை விடப்படுவதாகவும், வருகிற 26-ந் தேதி மீண்டும் கல்லூரி திறக்கப்படும் எனவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவிகள், பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னறிவிப்பு இன்றி விடுமுறை விடப்பட்டதால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் விடுதியில் தங்கி இருந்த மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது தெரிய வந்ததால் அவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. கல்லூரிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களையும் வகுப் பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் ஆங்காங்கே கல்லூரி வளாகத்தில் திரண்டு இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், “கல்லூரி நிர்வாகம் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி மாணவிகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து விடுமுறை அறிவித்துள்ளது. இந்த கல்வியாண்டின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறையால் பாடங்களை மாணவிகளுக்கு உரிய காலத்தில் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்றனர். 

Next Story