ஈரோட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை


ஈரோட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 Feb 2018 3:00 AM IST (Updated: 20 Feb 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மூலப்பாளையம் நல்லதம்பி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்கிற பவித்ரன் (வயது 33). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி ரமா பிரபா. இவர் கரூர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வைதனிகா (6). என்ற மகள் உள்ளார். இவள் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள்.

சதீஷ்குமாருடன் அவருடைய தாய் பர்வதம்மாளும் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு அனைவருக்கும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் ரமா பிரபா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த துணிகள் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் காணாமல் போய் இருந்தது. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ரமா பிரபா இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்து.

மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடந்த 51 நாட்களில் ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 102 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை எந்த திருடர்களும் போலீசில் சிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஈரோடு மாநகர் பகுதியில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உடனடியாக திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Next Story