காவிரி வழக்கின் தீர்ப்பை மத்திய அரசும், கர்நாடக அரசும் மதிக்கவில்லை ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு


காவிரி வழக்கின் தீர்ப்பை மத்திய அரசும், கர்நாடக அரசும் மதிக்கவில்லை ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 9:10 PM GMT)

காவிரி வழக்கின் தீர்ப்பை மத்திய அரசும், கர்நாடக அரசும் மதிக்கவில்லை என்று ஜி.கே.வாசன் கூறினார்.

ஆம்பூர்,

காவிரி குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும் முழுமையாக மதிக்கவில்லை. இது ஜனநாயக கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

தமிழகத்தில் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்கள் கருகி வருகிறது.

11 ஆண்டுகளுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தண்டனை தான் கிடைத்துள்ளது. 14.5 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக வழங்கும்படி தீர்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு மேலாக மேல்முறையீடும் இல்லை என்று தீர்ப்பு வழங்கி இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடமாட்டோம் என கர்நாடக முதல்-மந்திரி கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் பா.ஜ.க. அரசு மவுனம் காக்கிறது. இது கர்நாடகத்தில் நடைபெற உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அரசுகளின் கூட்டு சதியாகும். தேர்தல் அரசியலால் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் வங்கி முறைகேடுகளால் அடித்தட்டு மக்கள்தான் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதை ஒருபோதும் நாட்டு மக்கள் ஏற்க தயாராக இல்லை. யார் வங்கி முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தாலும், வங்கிகளை தவறாக நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பல்வேறு திட்டங்கள் கிடைக்காமல் நிலுவையில் உள்ளது.

இத்தகைய குழப்பமான சூழ்நிலை காரணமாக ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். பிரபலமானவர்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களிடம் இருந்து மக்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது. எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும். அவர்களின் இயக்க பணியை பொறுத்துதான் அவர்களின் எதிர்காலம் இருக்கும்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. அரசு சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. வார்டு, தொகுதி வரையறை விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கட்சியை பலப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மண்டல வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் கே.குப்புசாமி, மத்திய மாவட்ட தலைவர் பழனி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story