காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் போலீசில் சரண்; கொலை முயற்சி வழக்குப்பதிவு


காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் போலீசில் சரண்; கொலை முயற்சி வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 9:14 PM GMT)

பட்டதாரி வாலிபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்ததுடன், கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு டாலர்ஸ் காலனியை சேர்ந்த தொழில்அதிபரான லோகநாத்தின் மகன் வித்வத். எம்.பி.ஏ. பட்டதாரி அவர், கடந்த 17-ந் தேதி இரவு கப்பன்பார்க் அருகே உள்ள வணிகவளாகத்தில் இருக்கும் ஓட்டலுக்கு தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். அதே ஓட்டலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகனான முகமது ஹாரீஸ் நலபட்டும் நண்பர்களுடன் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வித்வத்தின் கால், முகமது ஹாரீஸ் நலபட் மீது பட்டுவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வித்வத்தை கொடூரமாக தாக்கினார்.

இதில், பலத்தகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து முகமது ஹாரீஸ் நலபட் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முகமது ஹாரீஸ் நலபட்டை பிடிக்க கப்பன்பார்க் உதவி போலீஸ் கமிஷனர் மஞ்சுநாத் தல்வார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் முகமது ஹாரீஸ் நலபட்டின் நண்பர்கள் 5 பேரை கைது செய்தார்கள். ஆனால் முகமது ஹாரீஸ் நலபட் போலீசாரிடம் சிக்கவில்லை. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஆனால் முகமது ஹாரீஸ் நலபட்டை கைது செய்யவில்லை என்று கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கடகலியை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பான வழக்கும் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனால் குற்றப்பிரிவு போலீசார், முகமது ஹாரீஸ் நலபட்டை தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில், நேற்று காலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஹாரீஸ் எம்.எல்.ஏ. தனது மகன் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் சரண் அடைவான் என்று கூறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவில் தலைமறைவாக இருந்த தனது மகனை அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது இந்த சம்பவத்தால் தான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், அதனால் போலீசில் சரண் அடைந்து விடும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முகமது ஹாரீஸ் நலபட் சம்மதித்ததாகவும் தெரிகிறது. இதனால் நேற்று காலையில் கப்பன்பார்க் போலீஸ் நிலையம் முன்பாக ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை 11.15 மணியளவில் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்திற்கு முகமது ஹாரீஸ் நலபட் ஆட்டோவில் வந்தார். பின்னர் அவர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கியதும் தனது தலையில் தொப்பியை வைத்து கொண்டு வேகமாக போலீஸ் நிலையத்திற்குள் சென்றார். அதன்பிறகு, பட்டதாரி வாலிபரை தாக்கிய வழக்கில் சரண் அடைந்திருப்பதாக போலீசாரிடம் அவர் கூறினார். அதைத்தொடர்ந்து, முகமது ஹாரீஸ் நலபட்டை போலீசார் கைது செய்தார்கள்.

வித்வத்தை கொடூரமாக தாக்கியது தொடர்பாக முகமது ஹாரீஸ் நலபட், அவரது நண்பர்கள் மீது கப்பன்பார்க் போலீசார் சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழே வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். ஆனால் வித்வத்தின் தந்தையான தொழில்அதிபர் லோகநாத், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் முகமது ஹாரீஸ் நலபட் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதை யடுத்து, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு, மந்திரி ராமலிங்கரெட்டி உத்தரவிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து, முகமது ஹாரீஸ் நலபட், அவரது நண்பர்கள் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்த சாதாரண சட்டப்பிரிவுகளுடன் சேர்ந்து, கொலை முயற்சி வழக்கையும் நேற்று கப்பன்பார்க் போலீசார் பதிவு செய்தார்கள். இது முகமது ஹாரீஸ் நலபட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அதாவது சாதாரண வழக்கு என்றால் ஜாமீனில் வந்து விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இதற்கிடையில், வித்வத்தை தாக்கிய வழக்கில் நபி அகமது என்பவரையும் போலீசார் கைது செய்தார்கள். பின்னர் முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரை நேற்று மதியம் பவுரிங் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றார்கள். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் நேற்று மாலையில் பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 7 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது வித்வத்தை தாக்கியது தொடர்பாக கைதான முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால், அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் முகமது ஹாரீஸ் நலபட் சார்பில் ஆஜரான வக்கீல் உஸ்மான், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர், முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

பின்னர் இருதரப்பினரையும் வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, அவர்கள் 7 பேரும் கோர்ட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story