டிரைவருடன் கார் வாங்கச்சென்றவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்


டிரைவருடன் கார் வாங்கச்சென்றவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 19 Feb 2018 11:45 PM GMT (Updated: 19 Feb 2018 10:31 PM GMT)

ஓமலூர் அருகே, டிரைவருடன் கார் வாங்கச்சென்றவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த எஸ்.பாளையம் நாராயணபுரம் காட்டுவளவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி கமலா. இவர்களது மகன் வெங்கடாசலம் (வயது 22). இவர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். லாரி டிரைவர். வெங்கடாசலம், டிரைவர் பாஸ்கரனிடம் தான் கார் வாங்க வேண்டும் என்றும், அதற்கு உதவுமாறும் கேட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட பாஸ்கரன் நேற்று முன்தினம் வெங்கடாசலத்தை அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

அதன்பின்னர் வெங்கடாசலம் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் குடும்பத்தினர் பாஸ்கரன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பாஸ்கரன் இருந்தார். அவரிடம் வெங்கடாசலம் பற்றி கேட்டனர். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை ஓமலூர் அருகே வேப்பாடி ஆற்றுப்பாலம் அருகே தண்டவாளத்தில் வெங்கடாசலம் உடல் கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் வெங்கடாசலம் குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு அங்கு சென்று பார்த்தனர். தண்டவாளத்தில் கிடந்த வெங்கடாசலம் உடலை பார்த்து கதறி அழுதனர்.

தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் மெய்யழகன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகம், சாமுராய் குரு மற்றும் பலரும் அங்கு திரண்டு வந்தனர். வெங்கடாசலம் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவருடைய உடலை அங்கிருந்து எடுக்க விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெங்கடாசலம் உறவினர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி அறிந்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து வெங்கடாசலம் உடலை அங்கிருந்து எடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story