தமிழக அரசு மத்திய அரசுக்கு எடுபிடியாக செயல்படுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி


தமிழக அரசு மத்திய அரசுக்கு எடுபிடியாக செயல்படுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2018 2:15 AM IST (Updated: 20 Feb 2018 9:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு, மத்திய அரசுக்கு எடுபிடியாக செயல்படுவதாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி,

தமிழக அரசு, மத்திய அரசுக்கு எடுபிடியாக செயல்படுவதாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மாநில மாநாடு


தூத்துக்குடியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் கூறியதாவது;–

சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22–வது மாநில மாநாடு கடந்த 17–ந்தேதி தொடங்கி இன்று மாலை (அதாவது நேற்று) வரை தூத்துக்குடியில் நடந்தது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 700–க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் தமிழக மக்களை பாதிக்கக்கூடிய 60–க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

எடுபிடி அரசு

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழக அரசாங்கம் கேட்டும் நிதியை கொடுக்க மறுக்கிறது. தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசு ஒரு மோசமான பொருளாதார கொள்கையை கடைபிடிக்கிறது. இதனை தமிழக அரசு தட்டி கேட்காமல் மத்திய பா.ஜனதா அரசுக்கு எடுபிடியாக செயல்படுகிறது.

குறிப்பாக நீட் தேர்வில் நமக்கு விலக்கு கிடைக்கவில்லை. வறட்சி, ஒக்கி புயல் போன்றவற்றுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை. தமிழகத்துக்கான அரிசியின் அளவை குறைத்து விட்டனர். வருங்காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு சாப்பிடுவதற்கு வினியோகிக்க அரிசி இருக்காது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த மத்திய, மாநில அரசுகளின் மோசமான பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த்து வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் மாற்று கொள்கைகளை பிரசாரம் செய்யக்கூடிய பிரசார பயணங்களை மேற்கொள்வது என்றும், வருகிற காலங்களில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. என்ற 2 சக்திகளை வீழ்த்துவதற்கான நடைமுறைகளை உருவாக்குவது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இன்று (அதாவது நேற்று) நடந்த செந்தொண்டர் அணிவகுப்பின் போது, காவல் துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளனர். இதில் சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதுபோன்ற கண்மூடித்தனமான அடக்கு முறையை கையாண்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளை திரட்டி காவல் துறைக்கு பாடம் புகட்ட பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story