இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 Jun 2025 8:01 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, சென்னை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 29 Jun 2025 6:55 PM IST
மேட்டூர் அணை 120 அடி என்ற முழு கொள்ளளவை இன்று எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. சுற்றுலா துணை அமைச்சர் ராஜேந்திரன் நீர் வெளியேற்றத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு 12 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து ஜூன் 12-ல் காவிரி படுகை பாசனத்திற்காக நீர் வெளியேற்றப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 68 ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் 2-வது முறையாக முழு கொள்ளளவை அணை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 44-வது முறையாகும்.
- 29 Jun 2025 6:34 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வருவது வழக்கம். தற்போது, மலையோர பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் முதல் இரண்டு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தாருடன் இன்று காலை முதலே அதிகளவில் திற்பரப்பு அருவிக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து உற்சாகமாக குளியலிட்டும், அருவியின் அழகை ரசித்தும் செல்கின்றனர்.
- 29 Jun 2025 5:16 PM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, வார விடுமுறையை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இன்று வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகின்றன. கோவில் வளாகம், வள்ளி குகை, கடற்கரைப் பகுதி, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து, விளையாடி மகிழ்ந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 29 Jun 2025 4:40 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, மதுரை, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 29 Jun 2025 4:17 PM IST
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.
அண்ணாமலையார் திருக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருப்பதால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- 29 Jun 2025 3:24 PM IST
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த வெள்ளி கிழமை தொடங்கி நடந்து வருகிறது. ரத யாத்திரையின் 2-வது நாளான நேற்று ரதங்களில் இருந்த 3 சாமிகளுக்கான திரைகளை அகற்றுவதற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, இன்று அதிகாலை 4 மணியளவில் குண்டிசா கோவில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
கூட்ட நெரிசல் சம்பவத்திற்காக முதல்-மந்திரி மோகன் சரண் மஜி இரங்கல் தெரிவித்து கொண்டார். இந்த விவகாரத்தில் 2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி, பூரி டி.சி.பி. பிஷ்ணு சரண் பதி மற்றும் மற்றொரு காவல் அதிகாரி அஜய் பதி ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து முதல்-மந்திரி மோகன் சரண் மஜி உத்தரவிட்டு உள்ளார். பூரி கலெக்டர் சித்தார்த் சங்கர் மற்றும் எஸ்.பி. வினீத் அகர்வால் ஆகியோரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.



















