கூலி வேலைக்கு சென்ற போது பரிதாபம்: காட்டெருமை தாக்கியதில் பெண் பலி


கூலி வேலைக்கு சென்ற போது பரிதாபம்: காட்டெருமை தாக்கியதில் பெண் பலி
x
தினத்தந்தி 20 Feb 2018 10:15 PM GMT (Updated: 20 Feb 2018 8:27 PM GMT)

கூலி வேலைக்கு சென்ற போது, காட்டெருமை தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கல்லட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சீகாமணி. இவருடைய மனைவி அன்னலட்சுமி (வயது 52). தேயிலை தோட்ட தொழிலாளி. இந்த நிலையில் நேற்று காலை அன்னலட்சுமி வழக்கம் போல் வீட்டில் இருந்து தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் புதர் மறைவில் நின்றிருந்த ஒரு காட்டெருமை திடீரென அன்னலட்சுமியை தாக்கியது.

இதில் அவருக்கு கை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அலறியபடியே அவர் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த அன்னலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அன்னலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற பெண் காட்டெருமை தாக்கி இறந்ததால் அவரது உறவினர்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். காட்டெருமை தாக்குதலை தடுக்க வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலைக்கு சென்ற இடத்தில் காட்டெருமை தாக்கி பெண் பலியான சம்பவம் கல்லட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காட்டெருமை தாக்கி இறந்த அன்னலட்சுமியின் மகள் மாரியம்மாளிடம் வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்ட உதவி வனபாதுகாவலர் சரவணன் ரூ.10 ஆயிரம் ரொக்கமும், ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையை நிவாரண உதவியாக வழங்கினார்.அப்போது வனச்சரகர் முத்துகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Next Story