பி.ஏ.பி.கால்வாயில் முறைகேடாக குழாய் பதித்து தண்ணீர் திருட்டு: விவசாயிகள் புகார்


பி.ஏ.பி.கால்வாயில் முறைகேடாக குழாய் பதித்து தண்ணீர் திருட்டு: விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 21 Feb 2018 3:45 AM IST (Updated: 21 Feb 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி.கால்வாயில் முறைகேடாக குழாய் பதித்து தண்ணீர் திருட்டு நடப்பதாக விவசாயிகள் முறையீட்டு குழு கூட்டத்தில் புகார் கூறினார்கள்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழுக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு:-

பொள்ளாச்சி பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில்லை. கால் நடை பராமரிப்புத்துறை மூலம் சென்ற ஆண்டு மானிய விலையில் வைக்கோல் வழங்கியது போல இந்த ஆண்டும் வழங்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள கிராமங்களில் லாரி மூலம் குடிநீர்வழங்க வேண்டும். ஆனைமலை புதிய ஆயக்கட்டில் கடந்த மாதம் நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் விடப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் கடைசி 5 நாட்கள் தண்ணீர் விடவில்லை. ஆனைமலை பகுதியில் தற்போது நெல் அறுவடை நடை பெற்று வருகிறது. வேளாண்மைபொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும் நெல் அறுவடை எந்திரம் கிடைப்பதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் தஞ்சாவூரில் இருப்பதாக கூறுகின்றனர். தற்போது தனியார் எந்திரம் மூலம் அதிக வாடகை கொடுத்து அறுவடை செய்ய வேண்டி உள்ளது.

ஆனைமலை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் பம்பு ஹவுஸ் தண்ணீர் மாசடைகிறது. இதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி அருகே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் உள்ள பி.ஏ.பி. கால்வாய் அருகில் சுமார் 15-க்கும் மேற்பட்டவர்கள் கிணறு அமைத்து கால்வாயிலிருந்து குழாய் மூலம் தண்ணீரை திருடி நிரப்புகின்றனர். அந்த தண்ணீரை லாரிகள் மூலம் விற்பனை செய்கின்றனர். தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் விற்பனை நடை பெற்று வருகிறது. அந்த லாரிகளுக்கு உரிமமும் இல்லை. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன.

பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் தொண்டாமுத்தூர் கிளைகால் வாய்க்கால் நல்லூர் பகிர்மானக் கால்வாயில் (மதகு எண்- 2 மற்றும் இடது முதல் மதகு எண் 13 வரை) சில விவசாயிகள் முறைகேடாக குழாய் பதித்து இரவுநேரங்களில் தண்ணீர் திருடுவதால் கடை மடை விவசாயிகள் கடுமையாக பாதிப்படைகின்றனர். விவசாயிகளின் புகார் அடிப்படையில் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ஆய்வு செய்தபோது தண்ணீர் திருடும் விவசாயிகள் உதவிப்பொறியாளர்களிடம் தகராறு செய்தனர். இது சம்பந்தமாக உதவி செயற்பொறியாளர் ஆழியார் போலீசில் புகார் கொடுத்தார். ஆய்விற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக் டரை பணி செய்ய விடாமல் தகராறு செய்தனர். பின்னர் இரு தரப்பினரிடமும், சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தாத்தூர் கிராமத்தில் கால்நடை கிளை மருந்தகம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும். அவர்களின் நிலங்களை சிலர் ஏமாற்றி வாங்கி உள்ளனர். பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் சின்னாம்பாளையம், மின் நகர், ஊஞ்சவேலாம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் வாரச்சந்தைக்கு கிராம ஊராட்சிகள் குத்தகை வசூல் செய்து வருகிறது. ஆனால் சந்தைக்கு தனி இடம் ஒதுக்கப்படவில்லை.

நெடுஞ்சாலையில் சந்தை நடைபெறுவதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது. விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

Next Story