மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது


மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 Feb 2018 3:00 AM IST (Updated: 21 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. கேள்வித்தாள் வெளியாவதை தடுக்க மாநில கல்வி வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எச்.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மும்பை, புனே, நாக்பூர், அவுரங்காபாத், கோலாப்பூர், அமராவதி, நாசிக், கொங்கன், லாத்தூர் ஆகிய 9 கோட்டங்களிலும் சுமார் 14 லட்சம் மாணவ, மாணவிகள் எச்.எஸ்.சி. தேர்வை எழுத உள்ளனர்.

மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களை உள்ளடக்கிய மும்பை கோட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

கடந்த ஆண்டு தேர்வின் போது, 5 பாடங்களுக்கான வினாத்தாள்கள் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெறாமல் இருப்பதற்காக மாநில உயர் மற்றும் மேல்நிலைக்கல்வி வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

இதன்படி தேர்வறை கண்காணிப்பாளர்கள் தங்களது செல்போன்களை ‘சுவிட்ச்ஆப்’ செய்து விட்டு தான் தேர்வறைக்குள் செல்லவேண்டும். கேள்வித்தாள் அடங்கிய பார்சல்கள் தேர்வறைக்குள் வைத்து தான் பிரிக்கப்பட வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நேரம் முடியும் வரை மாணவர்கள் தேர்வறைக்குள் தான் இருக்கவேண்டும். சீக்கிரமாகவே எழுதி முடித்து இருந்தாலும் விடைத்தாளை கொடுத்துவிட்டு செல்ல முடியாது.

தேர்வுகள் காலை 11 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் என 2 வேளை நடத்தப்படுகிறது. எனவே மாணவர்கள் அந்த நேரத்திற்குள் தேர்வறைக்குள் கட்டாயம் இருக்கவேண்டும். அதன் பிறகு வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பறக்கும் படையினர் தேர்வறைகளில் அதிரடி சோதனைகளில் ஈடுபட உள்ளனர்.

இன்று தொடங்கும் எச்.எஸ்.சி. தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதி வரை நடக்கிறது.


Next Story