8 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்


8 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்
x
தினத்தந்தி 22 Feb 2018 3:30 AM IST (Updated: 22 Feb 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

பூலாம்பட்டி அருகே 8 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

எடப்பாடி,

எடப்பாடி பூலாம்பட்டி அருகே உள்ள மணியனுர் காலனியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர் இங்குள்ளவர்கள் நேற்று விவசாய கூலி வேலைக்கு அனைவரும் சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டும் வீடுகளில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை குருசாமி என்பவரது குடிசை யில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது காற்று வீசியதால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதன் காரணமாக அருகில் இருந்த வீடுகளிலும் தீ பரவியது. இதில் 8 வீடுகள் எரிந்து சேதமானது. மேலும் பழனிசாமி என்பவரது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது. ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.

இது பற்றி தகவல் அறிந்ததும் எடப்பாடி, மேட்டூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் பாப்பா, முனிரத்தினம், வீரன், முனியப்பன் உள்பட 8 பேரின் வீடுகளும், வீட்டில் இருந்த பீரோ மற்றும் தங்கநகை, பணம், ஆதார் அட்டை, மாணவ-மாணவிகளின் புத்தகங்கள், ஆவணங்கள், ரேஷன்கார்டு என அனைத்தும் எரிந்து விட்டன.

மேலும் தீவிபத்து ஏற்பட்ட வீட்டில் உள்ள பொருட்களை எடுக்கச்சென்ற பாப்பா (வயது 80) என்ற மூதாட்டிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரைமுருகன், தாசில்தார் கேசவன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் அங்கு சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர். மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம், மற்றும் வேட்டி- சேலை, அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை வழங்கினார்கள்.

Next Story