கணவரை கைது செய்ய வலியுறுத்தி மகளுடன் இளம்பெண் தர்ணா


கணவரை கைது செய்ய வலியுறுத்தி மகளுடன் இளம்பெண் தர்ணா
x
தினத்தந்தி 22 Feb 2018 12:35 AM GMT (Updated: 22 Feb 2018 12:34 AM GMT)

3-வது திருமணம் செய்த கணவரை கைது செய்ய வலியுறுத்தி, கணவர் வீட்டு முன் மகளுடன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருவொற்றியூர்,

எர்ணாவூரைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவருடைய மகள் சுதா (வயது 30). எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், திருவொற்றியூர் கிராம தெருவைச் சேர்ந்த நிர்மல்குமார் (32) என்பவருக்கும் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் நவீனா என்ற மகள் உள்ளார்.

எம்.பி.ஏ. படித்துள்ள நிர்மல்குமார், ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வந்தார். திருமணமான சில நாட்களில் நிர்மல்குமார், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் சுதாவுக்கு தெரியவந்தது.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஒரு வருடத்தில் சுதா, கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நிர்மல்குமார், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மயூரிபிரியா என்ற பெண்ணை திருப்போரூர் கோவிலில் வைத்து 3-வது திருமணம் செய்துகொண்டார்.

இதையறிந்த சுதா, நேற்று தனது உறவினர்களுடன் கணவர் வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார். பின்னர் தனது மகள் நவீனாவுடன் கணவர் வீட்டுமுன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுதா, “3-வது திருமணம் செய்து கொண்ட கணவரை கைது செய்ய வேண்டும். எங்கள் திருமணத்தின்போது எனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த 65 பவுன் நகை, ஒரு கார், ஏ.சி. ஆகியவற்றை திருப்பி வாங்கித்தர வேண்டும்” என்றார்.

இதையடுத்து போலீசார், நிர்மல்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கணவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வதாக கூறி விட்டு தர்ணாவை கைவிட்டு சுதா, தனது மகளுடன் அங்கிருந்து சென்று விட்டார்.



Next Story