தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிலிருந்து அருணாசலேஸ்வரர், படவேடு கோவில் யானைகள் திரும்பின
கோவை தேக்கம்பட்டியில் நடந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், படவேடு கோவில் யானைகள் இன்று புத்துணர்வுடன் திரும்பி வந்தன.
திருவண்ணாமலை,
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கியது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, படவேடு ராமர் கோவில் யானை லட்சுமி சென்றன. மேலும் மாநிலம் முழுவதும் 33 யானைகள் பங்கேற்றன.
யானைகளுக்கு தினமும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு பசுந்தீவனங்கள் உள்பட சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. மேலும் காலை, மாலையில் களைப்பு தீர யானைகள் நீராட வைக்கப்பட்டன.
இந்த முகாமில் படவேடு யானை லட்சுமி சிலம்பாட்டம் மற்றும் ‘மவுத்ஆர்கன்’ வாசித்து கோவில் மணிகளில் இசை எழுப்பி அசத்தியது.
48 நாட்கள் நடந்த புத்துணர்வு முகாம் நேற்று முடிவடைந்தது. இதனையடுத்து கோவில் யானைகள் லாரிகள் மூலம் அந்தந்த கோவிலுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி தேக்கம்பட்டி முகாமிலிருந்து புறப்பட்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடைந்தது. கோவில் திருமஞ்சன கோபுர வாசலில் இணை ஆணையர் ஜெகன்னாதன் தலைமையில் யானைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து யானைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருஷ்டி கழித்து உள்ளே அழைத்து வரப்பட்டது. பின்னர் படையல் அளிக்கப்பட்டது. யானை ருக்குவை “தினமும் 2 வேளை நடைபயிற்சி அழைத்து செல்ல வேண்டும் ஒரு நாளைக்கு 200 கிலோ பசுந்தீவனம் உள்ளிட்ட உணவுகள் வழங்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாமுக்கு சென்று வந்த பின்னர், ருக்கு நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக இணை ஆணையர் ஜெகன்னாதன் தெரிவித்தார்.
இதேபோல் படவேடு கோவில் யானை லட்சுமியும் நேற்று அதிகாலை லாரி மூலம் படவேடு திரும்பியது. கோவில் வாசலில் யானைக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருஷ்டி பூசணிக்காயில் கற்பூர ஆரத்தி செய்யப்பட்டு திருஷ்டி கழிக்கப்பட்டது. யானையுடன் கோவில் நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் கால்நடை மருத்துவர் ராமர், கோவில் எழுத்தர் ரவி, பாகன் ரங்கன் உள்பட பலர் வந்தனர். முகாமுக்கு செல்வதற்கு முன்பு லட்சுமி 4 ஆயிரத்து 689 கிலோ எடை இருந்தது. தற்போது 4 ஆயிரத்து 870 கிலோவாக எடை அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story