தக்கலையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை திருட்டு


தக்கலையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 22 Feb 2018 10:15 PM GMT (Updated: 22 Feb 2018 6:36 PM GMT)

தக்கலையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

தக்கலை,

தக்கலை அருகே முத்தலக்குறிச்சி தேவி தெருவை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி அஜிதா (வயது 31). அஜிதா தனது கணவரின் அண்ணன் மகள் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார்.

நகைக்கடையில் 4 பவுன் நகையை வாங்கி தனது சூட்கேசில் வைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார். அதற்காக நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்தார். தக்கலை பஸ் நிலையம் சென்றடைந்ததும் அவர் இறங்கினார்.

நகை திருட்டு

அப்போது, கையில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்த போது நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை திருடி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அஜிதா நகைக்கடையில் நகை வாங்கியதை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் இதுதொடர்பாக அஜிதா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story