மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 176 கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 176 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2018 4:15 AM IST (Updated: 23 Feb 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 176 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் 120 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்களின் குடிநீர் தேவை மற்றும் பாசன வசதியை மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது அணையில் இருந்து டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேலும் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து, வினாடிக்கு 50 கனஅடிக்கும் குறைவாக வந்து கொண்டு இருந்தது. அணைக்கு நீர்வரத்தை விட, திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு பல மடங்கு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் நாள்தோறும் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 42.16 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 42.09 அடியாக குறைந்தது. இந்த நிலையில் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 49 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை வினாடிக்கு 176 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கலாம் என்றும், தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 500 கனஅடிக்கு மேல் வரத்தொடங்கினால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. 

Next Story