திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2018 10:15 PM GMT (Updated: 22 Feb 2018 7:21 PM GMT)

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி மற்றும் அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி மற்றும் அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாணவர் அணியின் மாநில இணை செயலாளர் பூவை ஜெரால்டு தலைமை தாங்கினார்.

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாபு கமலநாதன், துணை அமைப்பாளர்கள் அசோக்குமார், நிர்மல்ராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

காஞ்சீபுரத்தில் தி.மு.க., திராவிடர் கழகம், ம.தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் பேரவை உள்பட பல்வேறு மாணவர்கள் அணியின் கூட்டமைப்பான சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவை சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாணவரணி செயலாளர் அபுசாலி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளின் மாணவரணி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

பொன்னேரியில் திராவிட மாணவர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சமூகநீதி பாதுகாப்பு பேரவை சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story