காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அலட்சியம் ஜெ.தீபா குற்றச்சாட்டு


காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அலட்சியம் ஜெ.தீபா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Feb 2018 11:00 PM GMT (Updated: 22 Feb 2018 9:30 PM GMT)

காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அலட்சியம் காட்டிவிட்டதாக ஜெ.தீபா கூறினார்.

முசிறி,

முசிறியில் எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் பொதுச்செயலாளர் தீபா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஜெ.தீபா பேசுகையில், நாளைய தினம்(சனிக்கிழமை) வரலாற்று சிறப்புமிக்க தினம் ஆகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் நிலைத்திட நல்லாட்சி வழங்க வேண்டும். தீயசக்திகளை விரட்டிவிட்டு மக்கள் ஆட்சியை மலர செய்ய வேண்டும். ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். என்று கூறினார்.


பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது;–

எனது உயிருக்கு அசுசுறுத்தல் இருப்பது உண்மைதான். ஆனால் முழுநேர போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சிக்க தேவையில்லை. அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது. காவிரி நதிநீர் பெறுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி விட்டது. மக்கள் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்துவது இல்லை. காவிரி நீர் பெறுவதில் நீதிமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை தெரிவித்து உரிய தண்ணீர் பெற்றிருக்க வேண்டும்.

பிறமாநிலங்கள் தங்களது வாதத்தை சரியாக முன்வைத்து உரிய தண்ணீர் பெற்றுள்ளது. ரஜினி உள்பட அனைவரது அரசியல் பிரவேசமும் ஒரே மாதிரிதான் இருக்கும். மக்களுக்கு யார், என்ன நன்மை செய்கிறார்கள் என்பதை பொருத்தே அவர்களின் அரசியல் பின்னணி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் முசிறி கைகாட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றினார். தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story