நாகர்கோவிலில் முன்னாள் போலீஸ் ஏட்டு மனைவி மர்ம சாவு வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்


நாகர்கோவிலில் முன்னாள் போலீஸ் ஏட்டு மனைவி மர்ம சாவு வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 22 Feb 2018 11:15 PM GMT (Updated: 22 Feb 2018 9:30 PM GMT)

நாகர்கோவிலில் முன்னாள் போலீஸ் ஏட்டு மனைவி வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். அவரது மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அறுகுவிளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ். போலீஸ் ஏட்டுவாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ராஜகுமாரி (வயது 75). இவர்களுக்கு ஜெபர்சன் என்ற மகனும், 6 மகள்களும் உள்ளனர். 6 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். ஜெபர்சன் ஆசாரிபள்ளத்தில் வசிக்கிறார்.

ஜார்ஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் வீட்டில் ராஜகுமாரி மட்டும் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக ராஜகுமாரி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. வீட்டின் வாசலில் உள்ள விளக்கு 2 நாட்களாக பகலிலும், இரவிலும் ஒளிர்ந்து கொண்டே இருந்தது. வீடும் திறந்த நிலையில் கிடந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி ராஜகுமாரியின் மகன் ஜெபர்சனுக்கு நேற்று மாலை தகவல் தெரிவித்தனர்.

அவர் விரைந்து வந்து, வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கே ராஜகுமாரி பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெபர்சன் உடனடியாக கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன அய்யர், அனில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். ராஜகுமாரி பிணமாக கிடந்த இடத்தில் ரத்தக்கறை படிந்திருந்தது. ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘ராஜகுமாரி இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம். இச்சம்பவத்தை மர்ம சாவு என்று வழக்கு பதிவு செய்து விசாரிக்க உள்ளோம்‘ என்றனர்.

ராஜகுமாரியின் வீடு திருவள்ளுவர் தெருவின் கடைசி பகுதியில் அமைந்துள்ளது. வீட்டின் அருகே குறைவான குடியிருப்புகளே உள்ளன. மாடியுடன் கூடிய அவரது வீட்டின் கீழ் பகுதியை அவர் வாடகைக்கு விட்டிருந்தார். ஆனால் வாடகைக்கு இருந்தவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன் வீட்டை காலி செய்துவிட்டனர். இதனால் அவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

ராஜகுமாரி பிணமாக கிடப்பதாக தகவல் அறிந்து போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் அனைத்து அறைகளும் திறந்திருந்தன. பீரோவும் திறந்த நிலையில் தான் இருந்திருக்கிறது. எனவே யாரேனும் மர்ம நபர்கள் ராஜகுமாரி வீட்டில் திருட முயன்றிருக்கலாம் என்றும், அப்போது ராஜகுமாரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராஜகுமாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

Next Story