மைசூருவில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி


மைசூருவில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி
x
தினத்தந்தி 22 Feb 2018 11:36 PM GMT (Updated: 22 Feb 2018 11:36 PM GMT)

மைசூருவில் நேற்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

மைசூரு,

டவுனில் உள்ள குவெம்பு நகரம், சரஸ்வதிபுரம், ஒண்டிகொப்பல், கோகுலம், விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 3 வினாடிகள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தனர். சிலர் லேசான காயம் அடைந்தனர்.

சில இடங்களில் வீடுகள் குலுங்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. பாத்திரங்கள் குலுங்கி தரையில் விழுந்தன.

நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதி அடைந்த மக்கள் தங்களுடைய வீடுகளைவிட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் பீதியுடன் இருந்தனர். நீண்ட நேரமாக சாலைகளிலேயே அமர்ந்திருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் கழித்து தங்களுடைய வீடுகளுக்கு திரும்பினர்.

பெரும்பாலானோர் உடனடியாக பள்ளிகளுக்கு சென்று தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வந்துவிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மைசூரு டவுனில் உள்ள குவெம்பு நகரம், சரஸ்வதிபுரம், ஒண்டிகொப்பல், கோகுலம், விஜயநகரம் பகுதி மக்கள் மிகவும் பதற்றம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், எந்த அளவில் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது என்பது குறித்தும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலநடுக்கத்தால் நேற்று மைசூரு முழுவதும் ஸ்தம்பித்தது. இதனால் சாலைகள் மற்றும் பல்வேறு இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story