திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்


திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2018 5:34 AM IST (Updated: 23 Feb 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக மாற்றுத் திறனாளிகள் காலை 11 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டையை பதிவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி பலமுறை அலுவலகத்திற்கு வரவழைத்து அலைகழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அடையாள அட்டையை பதிவு செய்து ரசீதை கொண்டு வந்து கொடுத்தால் தான் உதவித்தொகையை போடுவேன் என்று கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவரை நாங்கள் சந்திக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கு வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்வதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாற்றுத் திறனாளிகளின் முற்றுகை போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story