இளம்பெண் தற்கொலை தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு நேரில் விசாரணை


இளம்பெண் தற்கொலை தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு நேரில் விசாரணை
x
தினத்தந்தி 23 Feb 2018 10:15 PM GMT (Updated: 23 Feb 2018 7:06 PM GMT)

மானாமதுரை அருகே குழந்தைகளை தூக்கிச்சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு நேரில் விசாரணை நடத்தியது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள கொம்புகாரனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி கொந்தீசுவரி(வயது 21). இவர் கொம்புக்காரனேந்தல் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் சுயஉதவிக்குழு தலைவி வீராயி மற்றும் அதன் உறுப்பினர்கள் கொந்தீசுவரியின் குழந்தைகளை தூக்கிச்சென்றனர். இதனை அறிந்த கொந்தீசுவரி விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மானாமதுரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயஉதவிக்குழு தலைவி வீராயியை கைது செய்துள்ளனர். மேலும் இறந்துபோன கொந்தீசுவரியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் கொந்தீசுவரி தற்கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழுவினர் கொம்புகாரனேந்தலுக்கு நேற்று வந்தனர். ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணை ஆணையர் முருகன் தலைமையிலான அந்த குழுவினர் கொந்தீசுவரியின் கணவர் கணேசன், தாயார் ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினர். பின்னர் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, ஆதிதிராவிடர்-பழங்குடியின அமைப்புகள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.

பின்னர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் கூறுகையில், வீராயியின் தொந்தரவு காரணமாகவே கொந்தீசுவரி இறந்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராயியை கைது செய்துள்ளனர். தற்போது மத்திய அரசின் நிதியான ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை முதற்கட்டமாக கொந்தீசுவரியின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது கணவர் கணேசனுக்கு அரசு வேலை வழங்கவும், தாயாருக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவும், அவரது குழந்தைகளுக்கு நல்ல கல்வி தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது என்றார். 

Next Story