விவசாயிகள், பொதுமக்கள் குறைகள் தெரிவிக்க ‘ஸ்மார்ட் சிவகங்கை’ இணையதளம்


விவசாயிகள், பொதுமக்கள் குறைகள் தெரிவிக்க ‘ஸ்மார்ட் சிவகங்கை’ இணையதளம்
x
தினத்தந்தி 24 Feb 2018 3:45 AM IST (Updated: 24 Feb 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குறைகளை தெரிவிக்க ‘ஸ்மார்ட் சிவகங்கை‘ என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.

தேவகோட்டை,

தேவகோட்டையில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் சேங்கைமாறன், முத்துராமலிங்கம், அய்யாசாமி, ஆபிரகாம், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஆரோக்கியம், ராஜபாண்டியன், ஆல்பர்ட், துரைராஜ், சித்தானூர், சந்திரபோஸ், நாகநாதன் உள்ளிட்ட விவசாயிகள் பல்வேறு குறைகளை எழுப்பி பேசினர். அப்போது விவசாயிகளின் கேள்விகளுக்கு கலெக்டர் பதிலளித்தார். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் லதா பேசியதாவது:-

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை காலவிரயம் இன்றி இருந்த இடத்திலிருந்து விண்ணப்பித்து பயன்படுத்திக்கொள்ளும் விதமாக “ஸ்மார்ட் சிவகங்கை” என்ற புதிய இணையதளம் மற்றும் அனைவரும் பயன்பெறும் விதமாக வாட்ஸ்-அப் எண் வழங்கப்பட உள்ளது. அதன்மூலம் வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகளின் மூலம் புதிய திட்டங்களை பெறுவதற்காக அதில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் 142 மனுக்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டன. பின்னர் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு 40 சதவீத மானியத்தில் பவர்டில்லர் எந்திரங்களை அவர் வழங்கினார். கூட்டத்தில் தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷா அஜீத், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் திலீப்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் பழனீஸ்வரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story