அழகு நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை


அழகு நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 24 Feb 2018 4:31 AM IST (Updated: 24 Feb 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அழகு நிலைய பெண் ஊழியருக்கு தொழில்அதிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அந்த தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணைக்கு ஆஜராக கோரி சம்மன் அனுப்பியுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு சதாசிவநகரில் தனியாருக்கு சொந்தமான அழகு நிலையம் உள்ளது. இங்கு 23 வயது இளம்பெண் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த அழகு நிலையத்திற்கு சதாசிவநகரில் வசிக்கும் தொழில்அதிபரான சாய் ராமகிருஷ்ணா கருடூரி என்பவர், மசாஜ் செய்வதற்காக சென்றார். உடல் முழுவதும் மசாஜ் செய்ய ரூ.11,800 கட்டணம் கொடுக்கவும் சாய் ராமகிருஷ்ணா சம்மதித்தார். அதன்படி, அவருக்கு அந்த இளம்பெண் மசாஜ் செய்ய தொடங்கினார்.

அப்போது இளம்பெண்ணிடம் ‘செக்ஸ்’ சம்பந்தமாக சாய் ராமகிருஷ்ணா பேசியதாக தெரிகிறது. மேலும் இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தான் சொல்லும்படி மசாஜ் செய்யும்படி சாய் ராம கிருஷ்ணா சொல்லியதாக கூறப்படுகிறது. இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உடனே இங்கு சட்டவிரோதமாக விபசார தொழில் நடப்பதாகவும், இதுபற்றி போலீசாரிடமும், உனது பெற்றோரிடமும் சொல்லி விடுவேன் என்றும் இளம்பெண்ணை சாய் ராமகிருஷ்ணா மிரட்டியதாக தெரிகிறது.

பின்னர் அழகு நிலையத்தில் இருந்து வெளியே வந்த இளம்பெண், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் பற்றி கூறினார். உடனே அழகு நிலையத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது போலீசாருடன், சாய் ராமகிருஷ்ணா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து தொழில்அதிபர் சாய் ராமகிருஷ்ணாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர், இளம்பெண்ணுக்கு தான் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்வதாகவும் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார்.

இதையடுத்து, சாய் ராமகிருஷ்ணாவை கைது செய்யாமல், போலீசார் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சம்பவம் தொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சதாசிவநகர் போலீசார் சாய் ராமகிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கைது செய்யப்படுவார் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story