உப்பட்டியில் விற்க முயன்ற கேரள சமையல் எரிவாயு சிலிண்டர்கள்- மினி லாரி பறிமுதல்


உப்பட்டியில் விற்க முயன்ற கேரள சமையல் எரிவாயு சிலிண்டர்கள்- மினி லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Feb 2018 3:00 AM IST (Updated: 25 Feb 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

உப்பட்டி பகுதியில் விற்க முயன்ற 28 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அதனை கொண்டு வர பயன்படுத்திய மினி லாரியை வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா உப்பட்டி பகுதியில் கேரள மாநில சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வட்ட வழங்கல் சித்தராஜ் தலைமையிலான துறையினர் உப்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது தமிழக பதிவு எண் கொண்ட ஒரு மினி லாரியில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு வருவதை வட்ட வழங்கல் துறையினர் கண்டனர். இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் மினி லாரியை வழிமறித்து அதன் டிரைவரிடம் வட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் லாரியில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கேரளாவில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு உப்பட்டி பகுதியில் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மினி லாரி மற்றும் 28 சிலிண்டர்களை வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிலிண்டர்கள், மினி லாரியை வட்ட வழங்கல் துறையினர் ஒப்படைத்தனர்.

இது குறித்து வட்ட வழங்கல் துறையினர் கூறும்போது, கேரளாவில் இருந்து கொண்டு வந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனால் 28 சிலிண்டர்கள், அதனை ஏற்றி வர பயன்படுத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனிடையே வெளிமாநிலத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்தது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story