அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.31 லட்சம் மோசடி வழக்கில் பெண் துப்புரவு தொழிலாளி கைது


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.31 லட்சம் மோசடி வழக்கில் பெண் துப்புரவு தொழிலாளி கைது
x
தினத்தந்தி 25 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.31 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும், ஒரு பெண் துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 31). இவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சமும், ஈரோட்டை சேர்ந்த முகமது உசேனிடம், அவருடைய மகன் முகமது முஜமீனுக்கு என்ஜினீயர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சமும் மோசடி நடந்தது. இதுதொடர்பாக பவானி கல்பாவி அருகே உள்ள முத்துரெட்டியூர் காலனி பகுதியை சேர்ந்த முனியப்பன் (32) என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 22-ந் தேதி கைது செய்தனர்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கொடுமுடி நல்லசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (29), ஈரோடு சின்னசேமூர் பகுதியை சேர்ந்த ரியாஷ் சித்திக் (29), அவருடைய மனைவி ஆயிஷா என்கிற தீபிகா (26), குமாரபாளையம் காவிரிநகர் பகுதியை சேர்ந்த சுலைமான் (27) ஆகியோரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி வழக்கில் முனியப்பனுக்கு உதவியாக இருந்த ஈரோடு செங்கோடம்பாளையம் பகுதியை சேர்ந்த கந்தம்பாள் என்கிற கண்ணம்மாள் (56) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கண்ணம்மாள் செங்கோடம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணம்மாள் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Next Story